Thursday 15 March 2018

ஜீவகாருண்யம் 2

அருட்பெருஞ்ஜோதி !
             அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
               அருட்பெருஞ்ஜோதி !
     தாவரங்களும் உயிர்கள் தானே,
 அவ்வுயிர்களைக் கொன்று உண்பது பாவம் இல்லையா ?
       **********************************
     ஆன்மநேய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு எனது பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன்.

        சன்மார்க்கம் அல்லாத பல சகோதர சகோதரிகளுக்கு பின்வரும் ஒரு சந்தேகமும், கேள்வியும் பல காலங்களாக இருந்துகொண்டேதான் இருக்கின்றது அவற்றைப்பற்றி பெருமான் தெளிவாக விளக்கி இருக்கின்றார்கள், அதைசற்று விபரமாக நாம் தற்போது பார்ப்போம்;
   உயிர்களில் பேதம் இல்லை ,
அறிவில்மட்டும்தான் பேதம் உள்ளது ,
கடவுள் எல்லா உயிர்களுக்குள்ளும் ஆன்மாக்களை தனது திருநடனமிடும் சபையாகக்கொண்டு அதன் உள்ளொளியாக இருந்து எல்லா உயிர்களுக்கும் பொதுவாக இருந்து நடம்புரிகின்றார்கள் என்றால் ,

     தாவரங்களிலும் அதே ஆண்டவரின் அருளொளிதானே உள்ளிருந்து அவ்வுயிரைக் காத்து வருகின்றது .

   1:அப்படி என்றால் அந்த உயிர்களை இம்சை செய்து வெட்டியும், ஒடித்தும், காய்களை, பழங்களை பறித்தும் அடித்தும், தண்டு இலை காய்களை சமைத்தும் நாம் உண்டு அனுபவிப்பது பாவம் இல்லையா ? 
    அதுவும் ஏகதேசமாய் ஒருவகையில் தாமச குண ஆகாரம்தான் , அந்த ஆகாரத்தை உண்டு அதனால் கிடைத்த உடல் மன சந்தோஷங்களும் அசுத்த கரண சந்தோஷங்களேயாகும்.
ஆனாலும் அப்படி நினைத்தல் கூடாது;

2: ஏன் அப்படி நினைத்தல் கூடாது ?
 கடவுள் எல்லா உயிர்களுக்குள்ளும் உயிராயும், உணர்வாயும் விளங்குவது அனைவரும் அறிந்ததுதான்,
அதேபோன்று புல், செடி, மரம் முதலான தாவரங்கள் எல்லாம் பரிசம்(தொடு உணர்வு) என்ற ஓரறிவுடைய தாவரங்களே ஆகும்.
    அவற்றின் உடம்பிலும் ஜீவ விளக்கம் ஒருசார் விளங்குகின்றது என்பதும் உண்மையே.

   ஆனால், 
A: இந்த தாவரங்கள் உருவாவதற்கு காரணமான வித்தாகிய விதைகள் எல்லாம் விதைப்பதற்கு முன்பு மற்ற வித்துக்களைப் போன்றே அறிவற்ற வெறும் சடமாகத்தான் இருந்தது என்பதை அறிதல் வேண்டும்.
     ஏன் என்றால் அந்த விதையில் உயிர் இருந்திருந்தால் அவற்றை நாம் விதைப்பதற்கு முன்பே முளைத்திடவேண்டும் இல்லையா,
ஆனால் அப்படி முளைக்க இயலாது ஏனென்றால் அவைகள் உயிரற்ற சடங்களாக இருந்தன.

B: அவ்விதைகளை நாமே நிலத்தில் விதைத்து அவற்றிற்கு நீர்விடுத்து 
உயிர்உண்டாக்குகின்றோம் என்பதாலும்,

C: அவற்றின் உயிர் இருக்கும் பகுதியான வேர்களை பிடுங்கி வேறுசெய்யாமல் அந்த உயிரால் விளைந்த உயிரற்ற சடங்களாகவும்,
அதே சமயத்தில் மீண்டும் வேறு உயிர்கள் தோன்றுவதற்கு இடமாக இருக்கும் அதனது சடமாகிய வித்துக்களையும், காய்களையும்,கனிகளையும்,பூக்களையும்,கிழங்குகளையும்,தழைகளையும்,ஆகாரங்களாகக் கொள்ளுகின்றோமே அன்றி ,
அவற்றின் உயிருள்ள வேராகிய முதல்களை நாம் ஆகாரமாகக் கொள்ளுவதில்லை ,

அவ்வாறு இல்லாமல் அவற்றின் வேரைப் பிரித்து ,மண்ணில் இருந்து பிடுங்கி அவற்றின் உயிரைப் போக்கி உண்பதுவும் ஒருவித பாவமேயாகும்.

3:கடவுள் எல்லா தேகத்திலும் உயிராவும் உணர்வும் இருக்கின்றார்கள் என்றால் அந்த தாவர உயிர்களுக்குள்ளும் இன்ப துன்ப உணர்வுகள் இருப்பதில்லையா ?

   A:நிச்சயமாக தாவரங்களுக்கு உணர்வுகள் உண்டு , ஆனால் அவற்றின் வித்து காய் கனி தழை தண்டு முதலியவைகளைக் கொள்ளும்போது ,
  நமது உடம்பின் ஒரு பகுதியாகிய நகங்களும், ரோமங்களும், சுக்கில சுரோணிதங்களும் எப்படி நீக்கும்போது வலியில்லாமல் இருக்கின்றதோ , அதேபோன்ற உணர்வுகள்தான் அவைகளுக்கும் இருக்கும் என்பதை சத்தியமாக அறிதல் வேண்டும்;

   B:அதுமட்டுமல்ல அவற்றின் கிளைகளை வெட்டி ஒரு இடத்தில் இருந்து மறுஇடத்தில் மண்ணில் வைத்து உயிர் ஊட்ட முடியும்,
அதுவும் இல்லாமல் வெட்டிய இடத்தில் ஒன்றுக்கு பலத்துளிர்கள் திருவருள் கருணையால் கிளைத்திடும் என்பதும் நாம் அறிந்ததேயாகும்.

C: அதுவுமன்றி தாவரங்களுக்கு மனம் ,புத்தி,சித்தம்,அகங்காரம் முதலிய அந்தக் கரணங்கள் விருத்தியில்லாதபடியால் அவைகள் உயிர்கொலையும் அல்ல அவற்றிற்கு துன்பம் உண்டுபண்ணுவதும் அல்ல,
என்பதையும் அறிதல் வேண்டும்.
அதனால் அது "ஜீவகாருண்ய விரோதமாகாது";

D: அந்த தாவர ஆகாரத்தினால் வந்த சந்தோஷமும் ஜீவ விளக்க சகிதமான கடவுள் விளக்கமே ஆகும் என்பதை அறிதல்வேண்டும்;

ஆகலில் உயர்வுடைத்தாகிய ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு எல்லாம் ஆகாரமாக கடவுள் விதித்த அருள்நியதி உணவு தாவர உணவேயாகும் என்பதை உறுதியாக அறிதல்வேண்டும் .

.......நன்றி,
.......வள்ளல் மலரடிப் போற்றி போற்றி,
.........பெருமான் துணையில்,
..........வள்ளல் அடிமை,
............வடலூர் இரமேஷ்;

ஜீவகாருண்யம் ..உலக அவத்தைகள் ஏழு.

அருட்பெருஞ்ஜோதி !
               அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
                அருட்பெருஞ்ஜோதி !
        உலக அவத்தைகள் ஏழு.
             ********************
          ஆன்மநேய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன்.

      இவ்வுலகில் மனிதப் பிறப்பு எடுத்து வாழவந்த ஆன்மாக்கள் அனைவரும்,
முற்பிறவிகளில் செய்த வினைகளின் பலனாகவும், அவ்வினைகளுக்கு உரிய தண்டனைகளாக ,
1 பசி,
2 தாகம்,
3 பிணி,
4 எளிமை
5 இச்சை,
6 பயம்,
7 கொலை என்ற ஏழுவகையான துன்பத்தால் மிகவும் அவத்தையுறுகின்றார்கள் என்பதையும், அவற்றைப்பற்றிய ஒரு சிறு விசாரத்தை கேள்வியும் பதிலுமாகப் பார்ப்போம்;

   1 இவ்வுலகில் மனிதத்தேகம் பெற்று வாழவந்த என்னைப்போன்ற மானுட ஆன்மாக்கள் ஏழுவகையான துன்பத்தால் அவத்தையுறுவதற்கு என்னக் காரணம் ?
  ...... அறிவு ஒரு சிறிதும் விளங்காமல் அஞ்ஞானம் என்னும் பேரிருளில் மூழ்கிக் கிடந்த ஆன்மாக்களாகிய நமக்கு எல்லாம் வல்ல தனிப்பெரும்பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனது "சச்சிதானந்த தன்மையை "எல்லா ஆன்மாக்களுக்கும் உணர்த்தி அத்தன்மையை எல்லா ஆன்மாக்களும் அடையும்பொருட்டு "மெய்யறிவு ஆனந்தம்" விளக்கம் பெறவேண்டி அறிவற்று கிடந்த நமக்கு முதன்முதலில் ஓரறிவு தாவரமாகவும் பிறகு ஈரறிவு நத்தை ,சங்கு,சிப்பி போன்றும் மற்றை மூவறிவு நான்கறிவு ஐந்தறிவு என உறுவன,ஊர்வன,பறப்பன,நடப்பன என்று நான்கு வகையான பிறப்புகளைக் கடவுள் படைத்து ஐந்தறிவு விலங்குகள் வரை பலப்பிறவிகள் எடுத்து எடுத்து பிறந்து இறந்து இறுதியில் இப்பொழுது நாம் எடுத்துள்ள இந்த ஆறறிவு விளங்கும் மானுடப் பிறவி கடவுள் பெருங்கருணையால் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பிறவியில்தான் நன்மை தீமைகளை ஆராய்ந்து பார்க்கக்கூடிய ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது.

   இப்பகுத்தறிவைக்கொண்டுதான், தான் யார் என்பதையும், தனக்குதேகம்கொடுத்து ஆளுகின்ற கடவுள் யார் என்பதையும், அக்கடவுளை அடையும் தன்மை எவ்வாறு என்பதையும் நமக்கு வழங்கப்பட்டுள்ள பகுத்தறிவைக்கொண்டு ஆராய்ந்து அறிந்து அடைதல்வேண்டும்.

     இதன்பொருட்டு முற்பிறவிகளில்  கடவுள் வகுத்த அருள்நியதிப்படி வாழாமல்  ஜீவகாருண்யமற்று கடின எண்ணம்கொண்டு இரக்கமற்று மற்றை உயிர்களுக்கு கேடுவிளைவித்து பாவவினைகளை கட்டி சேர்த்துக்கொண்டு வந்ததன் விளைவாக , அவ்வினைகளுக்கு உரிய பலனை அனுபவிக்கும் பொருட்டு ,செய்த ஒவ்வொரு வினைக்குத் தக்கவாறு நாம் ஏழுவிதமான அவத்தைகளை இப்பிறவிகளில் அனுபவிக்கின்றோம்;

     1 பசிக் கொடுமையை எதனால் அனுபவிக்கின்றோம் ?
   திணைவிதைத்தவன் திணையறுப்பான், வினை விதைத்தவன் வினையறுப்பான் என்பது போன்று , முற்பிறவியில் சிறிதும் இரக்கமில்லாமல் நம்மைத் தேடிவந்து ஆகாரம் கேட்டவர்களுக்கு ,
     சாதி சமய மத இனம் குலம் ஆச்சாரம் என்று பேதம்பார்த்து சிறிதும் இரக்கம் இல்லாமல் இல்லை என்றுசொல்லி தயவற்று அவர்களை விரட்டியடித்ததும், 
    தம்மிடம் வேலைசெய்பவர்களுக்கு காலத்தே ஆகாரம் கொடுக்காமல் பட்டிணியோடு வேலை வாங்கியதும்,
      போதுமான அளவிற்கு ஆகாரம் கொடுக்காமல் அரைவயிற்றிற்கும் கால்வயிற்றிற்கும் ஆகாரம் கொடுத்ததும்.
        நமது பயன்கருதி நமது வீட்டில் வளர்த்து வந்த தாவரங்களுக்கும், ஆடு மாடு கோழி குதிரை யானை போன்ற வாயற்ற ஜீவன்களுக்கு காலத்தே ஆகாரம் கொடுக்காமலும்      மேலும் அலட்சியம் செய்து அரைவயிற்றுக்கு உணவு கொடுத்து முழு வேலை வாங்கியதும்  ஆகிய பசியால் பரிதவித்த ஜீவன்களுக்கு பசியாற்றுதல் செய்யாத இரக்கமற்ற ஆன்மாக்கள் இப்பிறவிகளில் அதே பசி அவத்தையை தானும் அனுபவிப்பார்கள் என்பதை சத்தியமாக அறிதல் வேண்டும்.

2:தாகத்தினால் எப்படி துன்பப்படுகின்றோம் ?
   மேற்கூறியது போன்றே நம்மிடம் நாடி வந்து ஒருவாய் தண்ணீர் தாகத்திற்கு கேட்பவர்களுக்கு இரக்கமில்லாமல் சாதி மதம் சமயம் ஆச்சாரம் இனம் குலம் என்ற பேதம் பார்த்து தீண்டத்தகாதவனாக எண்ணியும் இரக்கமற்றும் தண்ணீர் கொடுக்க மறுத்தும் ,
அதுபோன்று நமது பயன்கருதி நமது வீட்டில் வளர்க்கின்ற தாவரங்களுக்கும் ஆடு மாடு கோழி குதிரை போன்ற வாயில்லா ஜீவன்களின் தாகமறிந்து அவைகளுக்கு தண்ணீர்கொடுக்காமல் இரக்கமற்று நடந்துகொண்ட கடின சீவர்கள் அதே போன்ற தாக அவத்தையை இப்பிறவியிலும் அனுபவிப்பார்கள் என்று சத்தியமாக அறிதல் வேண்டும்.
    
3 பிணியினால் படுகின்ற அவத்தையும் இப்படித்தானோ ?
    நிச்சயமாக அப்படித்தான் ,
மற்றவர்கள் துன்பத்தைக்கண்டு வருந்தாமல் அவர்களை கேளி செய்வதும், மருத்துவசெலவிற்காக பொருளுதவி கேட்கும்போது இல்லை என்றுசொல்லி வஞ்சகத்துடன் நடந்துகொள்வதும், 
அவர்கள் இப்பிணியினால் இறந்தால் நமக்கு லாபம் என்ற தயவற்று உள்ளொன்று புறமொன்றாய் நடிப்பதும்,
மருத்துவ செலவிற்கு பணம்கொடுப்பது போன்று கொடுத்து வட்டிமேல் வட்டியிட்டு அவர்களின் வீடு மனையை அபகரித்து அவர்களை கதற கதற வெளியேற்றியதும்,
      பகைமையை மனதில் கொண்டு மற்றவர்கள் வளர்த்துவரும் வாயற்ற ஜீவன்களை விரட்டி அடித்தும், கை கால்களை அடித்து உடைப்பதும்  ஆகிய துன்பங்களை செய்த ஆன்மாக்கள் இப்பிறவியிலும் அதேபோன்ற பிணி அவத்தைகளால் துன்பப்படுவார்கள் என்பதையும் திண்ணமாக அறிதல் வேண்டும்.
  
4 எளிமை என்ற வறுமை எதனால் ஏற்படுகின்றது ?
  ஆன்மாக்களினுடைய உட்பகைகளாக இருக்கின்ற ,
காமம் 
குரோதம்
லோபம்
மோகம்
மதம்
மார்ச்சரியம் என்ற இந்த ஆறுவகை தீயகுணங்களால் மற்றவர்களை துன்புறுத்தி அவர்களை ஏமாற்றி 
அவர்களுக்குரிய உடைமைகளைப் பறித்தல், கடவுள் வகுத்த அருள்நியதிப்படி நடவாமல் ஜீவகாருண்யமற்று( இரக்கமற்று )
நடந்து அவ்வுயிர்களுக்கு கேடுவிளைவித்தமையால் ,
       இப்பிறவியில் அவர்கள் தனது சுதந்திரம் எதுவும் இல்லாமல் வறுமையில் மிகுந்த துன்பத்தை அனுபவித்துக்கொண்டு மற்றவர்களை எதிர்பார்த்து வருத்தத்துடன் வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பதை உறுதியாக அறிதல் வேண்டும்.

5: இச்சை என்ற ஆசையும் இதுபோன்றுதானோ ?
     நிச்சயமாக,.... நம்மிடம் எல்லா வசதிகளும் இருந்தும் , தன்னைச் சார்ந்திருப்பவர்களிடமும் மற்றவர்களிடத்தும் கரிமித்தனத்துடன் லோபமாக பணம் செலவுசெய்வதற்கு யோசித்து அவர்களுக்கு காலத்தில் அனுபவிக்கவேண்டிய இச்சைகளை நிறைவேற்றாமல் , 
        கொடுக்கும் குணம் சிறிதும் இல்லாமல் மற்றவர்களுடைய இச்சைக்கு தடையாக இருப்பதுமட்டுமின்றி , கொடுக்கின்ற மற்றவர்களையும் கொடுக்கவிடாமல் தடுப்பதும் , தனக்குப் பிள்ளை இல்லை என்றபோதும் , வறுமையில் வாழும் திருமணமாகாத பெண்பிள்ளைகளுக்கு அவர்களின் பருவ இச்சை அறிந்து , காலம் கருதி அவர்களுக்கு இரக்கத்துடன் திருமணஉதவிகள் செய்யும் குணம் சிறிதும் இல்லாது லோபமாய் வாழ்ந்த ஆன்மாக்கள் அனைவறும் இப்பிறவியில் விருப்பப்பட்ட எந்தவித சுகத்தையும்
அடையமுடியாமல் அவத்தையுறுவார்கள் என்று சத்தியமாக அறிதல் வேண்டும்.

6:  பயம்  என்ற கொடிய அவத்தை எதற்காக ?
 அதுவும் ஜீவகாருண்யமற்ற செயல்களால் நடந்துகொண்டமையால்தான் அனுபவிக்கின்றோம்.
  ஆம் பயந்து ஓடுபவர்களை பகைவருக்கு காட்டிக்கொடுப்பது,
    வாங்கிய கடனுக்கு பயந்து,
கொடுக்க வழியில்லாமல் அவமானப்பட்டு ஒளிந்து மறைந்து கொள்பவர்களை , சிறிதும் இரக்கமில்லாமல் காட்டிக்கொடுத்து அவர்களின் அவமானத்தில் இவர்கள் ஆனந்தப்படுவது,

     ஆடு கோழி நாய் பூனை முதலிய வாயற்ற ஜீவன்களை உயிர் பயம் வெளிப்பட அலறியடித்து ஓட ஓட விரட்டி கல்லாலும் கட்டையாலும் கூறிய ஆயுதத்தாலும் அடிப்பதும் வெட்டுவதும் ஆகிய இரக்கமற்ற கொடுஞ் செய்கைகளால் இப்பிறவியில் அவர் அதேபோன்று பயத்துடன் வாழநேரிட்டது என்பதை அறிந்திடல் வேண்டும் ;

7 கொலை என்ற கொடிய வினைக்கும் இதுதான் காரணமா ?
    சத்தியமாக , உயிர்கள் அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டவைகள்,
அந்த உயிர்களை படைப்பதற்கும் அழிப்பதற்கும் அவருக்கு மட்டுமே உரிமை உண்டு. 
ஒரு உயிரை படைக்க முடியாத நமக்கு அந்த உயிரை எடுப்பதற்கு மட்டும் உரிமை எப்படி உண்டு.
      இதை உணராமல் நம்மைப் போன்றே இவ்வுலகில் வாழ்வதற்காக கடவுளால் படைக்கப்பட்ட உயிர்களை ஜீவகாருண்யம் சிறிதும் இல்லாமல்  தோலுக்காகவும், இறைச்சிக்காகவும், பகைமைக்கொண்டும், கொன்று அழிப்பது என்பது அருள்நியதிக்கிடையாது அது பாவத்தில் எல்லாம் தலையானது ஆகும்;

    இதுபோன்ற செய்கைகளாலேயே 
முழுமையாய் இப்பூமியில் வாழப் பிறவி எடுத்த மனிதர்கள் அற்ப ஆயுளில் பிணியாலும், வாகன விபத்துகளாலும், மற்றும் இயற்கை அழிவாலும், தற்கொலையாலும்,பகைமைகளாலும்  ஒருவருக்கொருவர் பொறாமைக்கொண்டும் கிடைப்பதற்கரிய மானிடப் பிறவி எடுத்தும் வாழ இயலாமல் அற்ப ஆயுளில் காலத்தை முடித்துக்கொள்கின்றோம் என்பதை உணர்தல் வேண்டும்.

8: அப்படி என்றால் இப்பிறவியில் மனிதர்கள் படும் இந்த ஏழுவகை துன்பதற்கும் காரணம் அவரவர்களேதனோ ?
    நிச்சயமாக நன்மையும் தீமையும் பிறர் தர வாராது;
   ஆகலில் இந்த அனைத்து துன்பத்திற்கும் நாமேதான் காரணம்;
அதுபோன்று நமக்கு கிடைக்வேண்டியதை மற்றவர்கள் தடுத்து கெடுத்துவிட்டார்கள் என்பதுவும் அறியாமை;
நமக்கு கிடைக்க வேண்டியப் பொருள் முற்பிறவி வினையால் அவர்களால் தடுக்கப்பட்டது என்பதுதான் உண்மை;

  அதே போன்று செய்வினைகள் என்று சொல்லி பணத்தை விரையம் செயவதும் அறியாமைதான்;
  நமக்கு எப்போதும் மற்றவர்களால் வினைசெய்ய இயலாது , நாம் முன்செய்த வினைதான் அதுபோன்று  நினைக்கச் செய்யும் என்பதை அறிதல் வேண்டும்.

    ஆனால் மேற்கூறிய அனைத்து வினைகளுக்கும் பரிகாரம் ஒன்று உண்டு ,
என்னவென்றால் , அதுதான் "ஜீவகாருண்யம்" அதுதான்  அதற்கு பரிகாரம்.

 ஆம் முற்பிறவியில் ஜீவகாருண்யமற்ற செய்கைகளால் இப்பிறவியில்
வினையை அனுபவிக்கின்ற நாம் 
அதே ஜீவகாருண்யத்தால்தான் அனைத்து வினைகளையும் போக்கிக்கொள்ளவேண்டும்;
இதுதான் "கடவுள் நியதி";
........நன்றி,
...........வள்ளல் மலரடி வாழ்க வாழ்க,
............பெருமான் துனையில்,
.............வள்ளல் அடிமை,
................வடலூர் இரமேஷ்;

Tuesday 13 March 2018

இறந்தால் அடுத்த பிறவி என்ன ?

இறந்தால் அடுத்த பிறவி என்ன ?

நாம் வாழும் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கின்றன. இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும்.எல்லாம் அவன் செயல்  என்று கடவுள் மேல் பாரத்தை சுமத்துகின்றோம்.எல்லாவற்றுக்கும் கடவுள் தான் காரணம் என்று சொல்லி ஆறுதல் அடைந்து கொள்கிறோம்.எல்லாவற்றுக்கும் கடவுள் தான் காரணம் என்றால் நமக்கு என்ன வேலை.நாம் ஏன் உழைக்க வேண்டும்.குடும்பம் குழந்தைகள் என ஏன் வாழவேண்டும். எதுவுமே தேவை இல்லையே ! கடவுளுக்கும் நாம் வாழும் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை.. 

கடவுள் வேலை என்ன ?

கடவுள் ஆன்மாவை அனுப்பி. ஆன்மா இந்த பஞ்ச பூத உலகத்தில் வாழ்வதற்கு உயிரும் உடம்பும் கொடுத்து .ஏழு வகையான பிறப்புகளை கொடுத்து .இறுதியில் உயர்ந்த அறிவுள்ள மனித பிறப்பு கொடுக்கப் பட்டுள்ளன.

மனிதன் தன் விருப்பம் போல் வாழ்வதற்கு. தேக சுதந்திரம். போக சுதந்திரம். ஜீவ சுதந்திரம் என்ற மூன்று  வகையான  சுதந்திரம் இறைவன்  கொடுத்துள்ளார். அதோடு கடவுள் வேலை நிறைவு பெறுகிறது.அதற்கு மேல் இவ்வுலகில் வாழும் வாழ்க்கை.நன்மை
தீமை அனைத்திற்கும் காரண காரியம் நாம் தான் என்பதை அறியாமல் .கடவுள் மேல் பாரத்தை போட்டு கண்ட கண்ட கடவுள்களை எல்லாம் சுற்றி சுற்றி வலம் வந்து.காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள் என பிச்சை எடுத்துக் கொண்டுள்ளோம்... இதுதான் தன்னைத் தான் அறியாமை என்பதாகும்.

இதைத்தான் தன்னை அறிந்து இன்பம் உற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே என்கிறார் வள்ளலார்.

தன்னை அறிந்தால் என்னை அறியலாம்.என்னை அறிந்தால் தன்னை அறியலாம்... என்பதை ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொண்டால் தான் ஆன்மாவில் இருக்கும் அறிவு வெளிப்படும்....

மரணம் ஏன் வருகின்றது.!

நாம் தவறு செய்வதால் மரணம் வருகின்றது. தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தனர்.என்பார் வள்ளலார்.சரி மரணம் வந்தால் அடுத்தப் பிறப்பு என்னவென்றாவது தெரியுமா ? என்றால் அதுவும் தெரியாது.எதுவுமே தெரியாமல் அற்ப ஆசைகளுக்கு தன்னை அடிமைப் படுத்திக் கொண்டு வாழ்ந்து.எல்லாவற்றையும் மறந்து.எல்லாவற்றையும் இழந்து இறுதியில் அனைத்தையும் விட்டுவிட்டு  மரணம் வந்து மாண்டு போகின்றோம்...

இறந்தவனுக்கு இருப்பவனைப் பற்றித் தெரியாது.இருப்பவனுக்கு இறந்தவனைப் பற்றித் தெரியாது..ஆனால் இறந்தவன் சொர்க்கம்.கைலாயம்.வைகுண்டம்.பரலோகம் சென்று மோட்சம் அடைந்துவிட்டார்.இறைவனோடு ஐக்கியமாகி விட்டார் என்று பொய்யான புளுகு மூட்டைகளை கட்டிவிடுகின்றார்கள்.

உலகில் பட்டம்.பதவி.புகழ்.ஆட்சி.அதிகாரங்கள் ஆன்மீக அறிவு எவ்வளவு பெற்று இருந்தாலும். மரணம் அடைந்து விட்டால் அவன் இந்த உலகத்தை விட்டு எங்கும் செல்ல முடியாது.மறுபடியும் கண்டிப்பாக பிறப்பு உண்டு.என்ன பிறப்பு என்று எவனுக்கும் தெரியாது...

தகுதிக்குத் தகுந்த பிறப்பு உண்டு என்று வள்ளலார் சொல்லுகின்றார்...

அடுத்த பிறப்பு எப்படி பிரிக்கப் படுகிறது ?

நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களுக்கும் நன்மை.தீமை என்று பிரிக்கப் படுகின்றன. அதற்கு புண்ணியம்.பாவம் என்று இரண்டு பெயர் உண்டு.

புண்ணியம் என்பது ஆரம்பத்தில் செய்வதற்கும் அனுபவிப்பதற்கும் முயற்சிப்பதற்கும் துக்கமாகவும்.பின் சுகமாகவும் விளங்கும் இதற்கு புண்ணியம் செய்துள்ளோம் என்று பெயர்..

பாவம் என்பது... ஆரம்பத்தில் சுகமாகவும் பின் துக்கமாகவும் இருப்பது பாவம் செய்துள்ளோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்...

அறிந்து செய்த பாவங்கள் அறியாமல் செய்த பாவங்கள் என இரண்டு விதமான பாவங்கள் உண்டு..

புண்ணிய பாவங்கள் நம்மை எவ்வாறு அடைகின்றன என்றால் ?
மனம்.வாக்கு.காயம்(உடம்பு) என்னும் மூன்றினாலும் அடைகின்றன..

மேலும்,...

 மனத்தினிடத்தில் நால்வகையும், வாக்கினிடத்தில் நால்வகையும், சரீரத்தினிடத்தில் நால்வகையும், ஆகப் பன்னிரண்டு வகையாய் நம்மை யடையும். அவையாவன:- 

மனத்தினால் பரதாரகமனம் பண்ண நினைத்தல், அன்னியருடைய சொத்தைக் கிரகிக்க நினைத்தல், அன்னியருக்குத் தீங்குசெய்ய நினைத்தல், முடியாத காரியங்களை நினைத்து அக்காரியம் அன்னியர்களுக்கு முடிந்ததை நினைத்துப் பொறாமையடைதல் - இவை நான்கும் மனத்தினால் செய்யும் பாவங்கள். 

வாக்கினால்.... பொய்சொல்லல், கோட்சொல்லல், புறங்கூறல், வீணுக்கழுதல் - இவை நான்கும் வாக்கினால் உண்டாகும் பாவங்கள். 

தேகத்தினால்...
 பிறர் மனைவியைத் தழுவுதல், புசிக்கத்தகாத வேத விரோத ஆகாரங்களைப் புசித்தல், அன்னியர்களை இம்சை செய்தல், தீங்குசெய்கிறவர்களைத் தடுக்காமல் அவர்களுக்கு உபகாரஞ் செய்தல் - இந்நான்கும் தேகத்தா லுண்டாகும் பாவங்கள். 

இவை போன்றவைகளைத் தவிர்த்து அன்னியர்களுக்கு நன்மை யுண்டாக நினைத்தல், பொறாமை யடையாதிருத்தல், அன்னியர் சொத்தைத் தனதாக்க எண்ணாதிருத்தல், தனது மனைவி தவிர அன்னியமான பெண்களைத் தாய் சகோதரி முதலியவர்களாகச் சிந்தித்தல் - இவை மனத்தால் வரும் புண்ணியங்கள். 

பொய் சொல்லாமை, கோட்சொல்லாமை, இன்சொல்லாடல், தோத்திரம் செய்தல் - இவை நான்கும் வாக்கினா லுண்டாகும் புண்ணியங்கள். அன்னியர்களுக்குத் தீங்குண்டாகுங்கால் விலக்கல் முதலான நன்மையான கிருத்தியங்க ளெல்லாம் தேகத்தாலுண்டாகும் புண்ணியங்கள்...என்பதாகும்.

அறிந்து செய்த பாவங்களும்.அறியாது செய்த பாவங்களும் எவ்வாறு நீங்கும் என்றால் !

 அறிந்த பாவங்கள் செய்தபின், தனக்குப் பாவம் செய்ததாக எவ்வகையிலாவது தெரிந்தபின், "நாம் பாவச் செய்கையை முன்னமே தெரிந்தும், மோகத்தாலும், மறதியாலும், அபிமானத்தாலும், அகங்காரத்தாலும், செல்வச் செருக்காலும், தாக்ஷிண்ய உடன்பாட்டாலும், உணவு பற்றியும், புகழ் பற்றியும், வழக்கம் பற்றியும் செய்து விட்டோமே!" என்று பச்சாத்தாபப் பட்டுப் பெரியோர்களை யடுத்து, (வள்ளலார் ) அவர்கள் சொல்லிய அவ்வண்ணம் இச்சரீரத்தைத் தவத்தாலும் விரதத்தாலும் இளைக்கச் செய்து புண்ணிய ஸ்தலங்களிற் (வடலூர் )சென்று வசித்து, இயன்ற அளவில் அன்ன விரயஞ் செய்தால் நீங்கும். மேலும், சத்தியற்றவர்களாயும் வார்த்திகர்களாயுமுள்ள அறிவு சார்ந்த  மனிதர்களுக்கு தொண்டு செய்தால் நீங்கும். மகான்கள் நேரிடாத பக்ஷத்தில், பச்சாத்தாபத்துடன் பாவ காரியங்களைச் செய்யாமலும், பாவிகளுடைய கூட்டத்தில் பழகாமலும், திருவருளைச் சிந்தித்து அவர்கள் தரத்திற் கொத்தவாறு இடைவிடாது இறைவனைச் சிந்தித்துக் கொண்டிருந்தால் நீங்கும்.

அறியாத பாவங்கள் யாவெனில், நடக்குங் காலத்திலும், நீராடுங்காலத்திலும், சயன காலத்திலும், தனக்குத் தோன்றாமல் நேரிடும் பாவங்களாம். இதன்றி அவை மனத்திற்குப் புலப்படாமலும் உண்டாகும். இவைகள் யாவும் தினஞ் செய்யும்  பாராயணத்தாலும், ஸ்தோத்திரத்தாலும், விருந்துபசரித்தலாலும் தெய்வம் பராவலாலும் நீங்கும்.

பிராயச்சித்த முதலியவைகள் செய்யாவிட்டால் பாவங்களாலடையுங் கதி யென்ன? 

இறந்த பின் பிறவிகள் என்ன ?

மனத்தால் செய்யும் பாவங்கட்குச் சண்டாளாதி சரீரமுண்டாகும். வாக்காற் செய்த பாவங்கட்கு மிருகம் முதலான சரீரமுண்டாகும். தேகத்தால் செய்யும் பாவங்கட்கு மரம் முதலான சரீரமுண்டாகும்.

எனவே நம் மனித பிறப்பு. வாழ்க்கை மரணம் இல்லாமல் வாழ்வதற்காகவே இறைவனால் கொடுக்கப் பட்டது.

இந்த தேகம் போனால் இந்த மனித தேகம் கிடைப்பது என்பது உறுதி அல்ல...

அஜாக்கிறதையால் மரணம் வந்தால் மீண்டும் மனித பிறப்பு கிடைக்க வேண்டுமானால்.மேலே கண்டபடி வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும் என்று வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார்..

நம் வாழ்க்கை நம்மிடம் தான் உள்ளது...

தீதும் நன்றும் பிறர் தர வாராது...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ?

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்...
9865939896..

தாய் தந்தை உறவினர்கள் யார்?

வள்ளலார் மோகன்

Friday 2 March 2018

பழைய ஆன்ம உரிமை

அருட்பெருஞ்ஜோதி !
                    அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
                      அருட்பெருஞ்ஜோதி !
              பழைய ஆன்ம உரிமை
               ***********************
           ஆன்மநேய தயவுடைய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன்;
       
         இவ்வுலகில் வாழ்வதற்கு என்று கடவுளால் சிருட்டிக்கப்பட்டுள்ள ஏழு பிறவிகளில் (தேவர், மனிதர்,நரகர்,
மிருகம்,பறவை,ஊர்வன,தாவரம்) உள்ள ஜீவராசிகள் எல்லாம் அவைகளுக்கு வழங்கப்பட்டுள்ள  அறிவிற்கு தக்கவாறு பிறவிகள் எடுத்துள்ளன ,
அவை ஓரறிவுள்ள தாவரம் தொடங்கி ஆறறிவுள்ள மனிதர்கள்வரை ,
ஒருவாறு சித்தர்களால் சொல்லப்பட்டுள்ள 84,00000 , பிறவிகளுக்கும் அவைகள் எடுத்துள்ள பிறவிகளுக்கு தக்கவாறு ஒவ்வொரு பெயர்வைத்து அழைக்கின்றோம்.

    ஏன் மனிதர்களுக்குக்கூட ஒவ்வொருவருக்கும் ஒருபெயர் வைத்து அழைக்கின்றோம்;

     ஆனால் இந்தப் பெயர்கள் எல்லாம் அவைகள் தேகம் எடுத்தப்பிறகு, 
அந்த உடலுக்காக வைத்து
அழைக்கப்படுகின்ற உடற் பெயர்களேயாகும்.

    அனைத்து ஜீவராசிளுக்கும் பிறப்பதற்கு முன்பு எந்தப்பெயர்களும் இல்லை என்பதும்,எல்லாரும் ஆன்மாக்கள் என்ற ஒரு பெயர்களோடுதான் இருக்கின்றோம் என்பதையும் அறிதல் வேண்டும்;

      ஆம் நாம் அனைவரும்........ , அனைவரும் என்றால்,
 ஓரறிவு தாவரம் தொடங்கி ஆறறிவு மனிதர்கள்வரை  அனைத்து ஜீவராசிகளுமே ஆன்மா என்ற ஓர் உறவோடுதான் பிறப்பதற்கு முன் இருந்தோம்;

    இம்மண்ணில் தேகம் பெற்று பிறந்த பிறகுதான் எடுத்த பிறவிக்குதக்கவாறு அடையாளத்திற்காக என்று ஓர் பெயரை வைத்துக்கொண்டு, பந்த பாசத்திற்கு அடிமையாகி நான், எனது, என்னுடையது என்று தற்போதத்துடன் அகங்கரித்து பிரிந்துகிடந்து வினைச்செயலாலும் மாயைச் செயலாலும் இன்ப துன்பத்தை அனுபவிக்கின்றோம்;

   ஆனால் நாம் அனைவரும் ,
சர்வசக்தியுடைய இயற்கை உண்மைக் கடவுளின் , பெருங்கருணையால்
இயற்கை உண்மை என்னும் ஒரே தன்மையுடன் ஏகதேசமாய் சிருட்டிக்கப்பட்டவர்கள் என்பதும்,
மற்றும் நாம் அனைவரும் ஆன்மாக்கள் என்ற சகோதர "உயிர் உறவுடையவர்கள் "என்பதையும்,
     
சகோதர்களுள் ஒருவர் ஆபத்தால் துக்கப்படும்போதும், அல்லது துக்கப்படுவார் என்று கேட்டபோதும், அறிந்தபோதும் ,அவர்கள் நமது" பழை ஆன்ம உரிமையுடைய" சகோதர உறவுகள் என்ற உரிமையுடனும் அவர்களுக்கு உதவ முன்வருதல்வேண்டும்;

உடம்பிற்குதான் பெயர் உண்டு,
உயிருக்கு எந்தப் பெயரும் இல்லை;
நாம் அனைவரும் ஆன்மாக்கள்,
ஆன்ம உறவுகள்,
ஆன்மநேயம் உடையவர்கள்;
நமக்குள் ஆன்ம உறவு என்ற சகோதரதன்மை உண்டு;
ஏன்என்றால் ஆன்மாக்களாகிய நமக்கு  கடவுள் என்ற தாயும் தந்தையும் ஒருவரே ஆகும்;


......நன்றி,
.......வள்ளல் மலரடிப் போற்றி போற்றி,
........பெருமான் துணையில்,
..........வள்ளல் அடிமை,
..............வடலூர் இரமேஷ்;

ஆன்ம உருக்கம்