ஜீவகாருண்யம்



1.    பசி என்கிற நெருப்பானது ஏழைகள் தேகத்தினுள் பற்றி எரிகின்ற போது ஆகாரத்தால் அவிக்கின்றதுதான் சீவகாருணியம் –

2.    பசி என்கிற விஷக்காற்றானது ஏழைகள் அறிவாகிய விளக்கை அவிக்கின்ற தருணத்தில் ஆகாரங்கொடுத்து அவியாமல் ஏற்றுகின்றதே சீவகாருணியம் –

3.    கடவுளியற்கை விளக்கத்திற்கு இடமாகிய சீவதேகங்களென்கிற ஆலயங்கள் பசியினால் பாழாகுந் தருணத்தில் ஆகாரங் கொடுத்து அவ்வாலயங்களை விளக்கஞ் செய்விப்பதே சீவகாருணியம்

4.    கடவுள் இன்பத்தைப் பெறுகின்ற நிமித்தம் தேகங்களிலிருந்து குடித்தனஞ்   செய்கின்ற சீவரது தத்துவக் குடும்ப முழுதும் பசியினால் நிலை தடுமாறி அழியுந் தருணத்தில் ஆகாரங்கொடுத்து அக்குடும்ப முழுதும் நிலைபெறச் செய்வதே சீவகாருணியம் –

5.    பசி என்கிற புலியானது ஏழை உயிர்களைப் பாய்ந்து கொல்லத்  தொடங்குந் தருணத்தில் அப்புலியைக் கொன்று அவ்வுயிரை இரட்சிப்பதே சீவகாருணியம்

6.    பசி என்கிற விஷம் தலைக்கேறிச் சீவர் மயங்குந் தருணத்தில் ஆகாரத்தால் அவ்விஷத்தை இறக்கி மயக்கந் தெளியச் செய்வதே சீவகாருணியம் –

7.    பசி என்கிற கொடுமையாகிய தேள் வயிற்றிற் புகுந்து கொட்டுகின்றபோது கடுப்பேறிக் கலங்குகின்ற ஏழைகளுக்கு ஆகாரத்தால் அக்கடுப்பை மாற்றிக் கலக்கத்தைத் தீர்ப்பதே சீவகாருணியம் –

8.    'நேற்று இராப்பகல் முழுதும் நம்மை அரைப்பங்கு கொன்றுதின்ற பசியென்கிற பாவி இன்றும் வருமே! இதற்கு என்ன    செய்வோம்!' என்று ஏக்கங் கொள்கின்ற ஏழைச் சீவர்களது ஏக்கத்தை நீக்குவதுதான் சீவகாருணியம் –

9.    'வெயிலேறிப் போகின்றதே, இனிப் பசியென்கிற வேதனை வந்து சம்பவிக்குமே! இந்த விதி வசத்திற்கு என்ன செய்வது!' என்று தேனில் விழுந்த ஈயைப்போல, திகைக்கின்ற ஏழைச் சீவர்களுடைய திகைப்பை நீக்குவதுதான் சீவகாருணியம் –

10.  'இருட்டிப் போகின்றதே, இனி ஆகாரங் குறித்து எங்கே போவோம்! யாரைக் கேட்போம்! என்ன செய்வோம்!' என்ற விசாரத்தில் அழுந்திய ஏழைச் சீவர்களது விசாரத்தை மாற்றுவதே சீவகாருணியம் –

11.  'நடந்து நடந்து காலுஞ் சோர்ந்தது, கேட்டுக்கேட்டு வாயுஞ் சோர்ந்தது, நினைத்து நினைத்து மனமுஞ் சோர்ந்து இனி இப்பாவி வயிற்றுக் கென்ன செய்வோம்!' என்று கண்­ர் வடிக்கின்ற ஏழைகளுக்கு ஆகாரங் கொடுத்துக் கண்­ரை மாற்றுவதே சீவகாருணியம் –

12.  'பகற்போதும் போய்விட்டது, பசியும் வருத்துகின்றது, வேறிடங்களிற் போக வெட்கந் தடுக்கின்றது, வாய் திறந்து கேட்க மானம் வலிக்கின்றது, வயிறு எரிகின்றது, உயிரை விடுவதற்கும் உபாயந் தெரியவில்லை; இவ்வுடம்பை ஏன் எடுத்தோம்!' என்று மனமும் முகமும் சோர்ந்து சொல்வதற்கு நா வெழாமல் உற்பாத சொப்பனங் கண்ட ஊமையைப் போல் மனம் மறுகுகின்ற மானிகளாகிய சீவர்களுக்கு ஆகாரங்கொடுத்து மானத்தைக் காப்பதுவே சீவகாருணியம் –

13.  'நாம் முன் பிறப்பில் பசித்தவர்கள் பசிக் குறிப்பறிந்து பசியை நீக்கியிருந்தால், இப்பிறப்பில் நமது பசிக்குறிப்பறிந்து பசியை நீக்குவதற்குப் பிறி   தொருவர் நேர்வார்; அப்போது அப்படி நாம் செய்ததில்லை, இப்போது நமக்கிப்படிச் செய்வாருமில்லை' என்று விவகரித்துக்கொண்டு தூக்கம் பிடியாமல் துக்கப்படுகின்ற ஏழைச் சீவர்களுக்கு ஆகாரங் கொடுத்துத் துக்கத்தை நீக்கித்   தூக்கம் பிடிக்க வைப்பதே சீவகாருணியம்.

14.  தேக முழுதும் நரம்புகள் தோன்றப் பசியினால் இளைத்து உயிரொடுங்கி மூர்ச்சை மூடிய காலத்தும் அயலாரைக் கேட்பது துணியாமற் கடவுளை நினைத்து நினைத்து நெருப்பிற் படுத்து நித்திரை செய்யத் தொடங்குவாரைப் போல், அடிவயிற்றிற் கொடிய பசி நெருப்பை வைத்துப் படுக்கத் தொடங்குகின்ற விவேகி களுக்கு ஆகாரங் கொடுத்து அந்தப் பசி       நெருப்பை ஆற்றுவதே சீவகாருணியம் –

15.  'நேற்றுப் பட்டினி கிடந்தது போல் இன்றும் பட்டினி கிடப்பது எப்படி? நாம் பாலிய வசத்தால்  இன்றும் பட்டினி கிடக்கத் துணிவோ மாயினும் பட்டினி சகியாத நமது ஏழை மனைவி வயிற்றுக்கு யாது     செய்வோம்? இவள் பசியைக் குறிப்பதும் பெரிதல்ல, வார்த்திப திசையால் மிகவுஞ் சோர்ந்த நமது தாய் தந்தைகள் இன்றும் பட்டினி கிடந்தால் இறந்து விடுவார்களே! இதற்கென்ன  செய்வோம்? பசியினால் அழுதழுது களைத்த நமது புத்திரர்களது சோர்ந்த முகத்தை எப்படிப் பார்ப்போம்?' என்று எண்ணி எண்ணிக் கொல்லன் உலையிலூத மூண்ட நெருப்பைப் போல், பசி நெருப்பும் பயநெருப்பும் விசார      நெருப்பும் உள்ளே மூண்டபடியிருக்கக் கன்னப்புடையில் கைகளை வைத்துக்       கொண்டு கண்களில் நீர் கலங்க வருந்துகின்ற ஏழைகளுக்கு ஆகாரங் கொடுத்து வருத்தத்தை மாற்றுவதே சீவகாருணியம் –

16.  'கண் கை கால் முதலிய உறுப்புக்களிற் குறைவில்லாதவர்களாகி ஆகாரஞ் சம்பாதிக்கத் தக்க சக்தி யுள்ளவர்களும் பசியால் வருந்தி இதோ படுத்திருக்கின்றார்கள்; குருடும் செவிடும் ஊமையும் முடமுமாக விருக்கின்ற நமக்கு ஆகாரம் எந்த வழியாற் கிடைக்கும்! பசி எப்படி நீங்கும்!' என்று தனித்தனி நினைத்து நினைத்துத் துக்கப்படுகின்ற ஏழைகளுக்கு ஆகாரங் கொடுத்துத் துக்கத்தை நீக்குவதே சீவகாருணியம் –

17.  பசியினால் வருந்துகின்றவர்கள் எந்தத் தேசத்தாராயினும் எந்தச் சமயத்தாராயினும் எந்தச் சாதியாராயினும் எந்தச் செய்கையாராயினும் அவர்கள் தேச ஒழுக்கம், சமய ஒழுக்கம், சாதி ஒழுக்கம்,    செய்கை ஒழுக்கம் முதலானவைகளைப் போதித்து விசாரியாமல், எல்லாச் சீவர்களிடத்தும் கடவுள் விளக்கம் பொதுவாக விளங்குவதை அறிந்து பொதுவாகப் பார்த்து அவரவர் ஒழுக்கத்திற்குத் தக்கபடி அவர்கள் பசியை நிவர்த்தி செய்விப்பதே சீவகாருணியம் –

18.  சன்மார்க்க ஒழுக்கத்திற்கு ஒத்த சத்துவ ஆகாரத்தால் பசிநிவர்த்தி செய்து கொள்ளத் தக்க மிருகம் பறவை ஊர்வன தாவரம் என்கின்ற உயிர்களுக்குப் பசிவந்தபோது பசிநிவர்த்தி செய்விப்பதே சீவகாருணியம்.









No comments:

Post a Comment