பசியின் அவஸ்த்தை


சீவர்களுக்குப் பசி அதிகரித்த காலத்தில்...
  1. சீவஅறிவு விளக்கமில்லாமல் மயங்குகின்றது -
  2. அது மயங்கவே அறிவுக்கறிவாகிய கடவுள் விளக்கம் மறைபடுகின்றது -
  3. அது மறையவே புருடதத்துவம் சோர்ந்து விடுகின்றது -
  4. அது சோரவே பிரகிருதிதத்துவம் மழுங்குகின்றது -
  5. அது மழுங்கவே, குணங்களெல்லாம் பேதப்படுகின்றன -
  6. மனம் தடுமாறிச் சிதறுகின்றது -
  7. புத்தி கெடுகின்றது -
  8.  சித்தம் கலங்குகின்றது -
  9. அகங்காரம் அழிகின்றது -
  10. பிராணன் சுழல்கின்றது -
  11. பூதங்களெல்லாம் புழுங்குகின்றன -
  12. வாத பித்த சிலேட்டுமங்கள் நிலை மாறுகின்றன -
  13. கண் பஞ்சடைந்து குழிந்து போகின்றது -
  14. காது கும்மென்று செவிடுபடுகின்றது -
  15. நா உலர்ந்து வறளுகின்றது -
  16. நாசி குழைந்து அழல்கின்றது -
  17. தோல் மெலிந்து ஸ்மரணை கெடுகின்றது -
  18. கை கால் சோர்ந்து துவளுகின்றன -
  19. வாக்குத் தொனிமாறிக் குளறுகின்றது -
  20. பற்கள் தளருகின்றன -
  21. மலசலவழி வெதும்புகின்றது -
  22. மேனி கருகுகின்றது -
  23. ரோமம் வெறிக்கின்றது -
  24. நரம்புகள் குழைந்து நைகின்றன -
  25. நாடிகள் கட்டுவிட்டுக் குழைகின்றன -
  26. எலும்புகள் கருகிப் பூட்டுகள் நெக்குவிடுகின்றன -
  27. இருதயம் வேகின்றது -
  28. மூளை சுருங்குகின்றது -
  29. சுக்கிலம் வெதும்பி வற்றுகின்றது -
  30. ஈரல் கரைகின்றது -
  31. இரத்தமும் சலமும் சுவறுகின்றன -
  32. மாமிசம் குழைந்து தன்மை கெடுகின்றது -
  33. வயிறு பகீரென்றெரிகின்றது -
  34. தாப சோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றன -
  35. உயிரிழந்து விடுவதற்கு மிகவுஞ் சமீபித்த அடையாளங்களும் அனுபவங்களும் மேன்மேலும் தோன்றுகின்றன.
  36. பசியினால் இவ்வளவு அவத்தைகளும் தோன்றுவது சீவர்களுக்கெல்லாம் பொதுவாகவேயிருக்கின்றது.


இவ்வளவு அவத்தைகளும் ஆகாரங் கிடைத்தபோது உண்டு பசி நீங்க நீங்குகின்றன. அப்போது தத்துவங்களெல்லாம் தழைத்து உள்ளங் குளிர்ந்து அறிவு விளங்கி அகத்திலும் முகத்திலும் சீவகளையும் ,கடவுள்களையும் துளும்பி ஒப்பில்லாத திருப்தியின்பம் உண்டாகின்றது. இப்படிப்பட்ட இன்பத்தை உண்டுபண்ணுகின்ற புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை இணையென்று சொல்லலாம்? இந்தப் புண்ணியத்தைச் செய்கின்ற புண்ணியர்களை எந்தத் தெய்வத்துக்குச் சரியென்று சொல்லலாம்? எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுளம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும்.

இதனால் நரக வேதனை, சனனவேதனை, மரண வேதனை என்கின்ற மூன்று வேதனைகளுங் கூடி முடிந்த வேதனையே பசிவேதனை என்றும், அகம் புறம் நடு கீழ் மேல் பக்கம் என்கிற எவ்விடத்தும் நிறைந்து எக்காலத்தும் வேறுபடாத மோக்ஷ இன்பமே ஆகாரத்தினாலுண்டாகும் திருப்தியின்பம் என்றும் அறியப்படும்.

  • பசியில்லாவிடில் சீவர்கள் ஆகாரங் குறித்து ஒருவரையொருவர் எதிர்பார்க்க மாட்டார்கள்; 
  • எதிர்பாராத பக்ஷத்தில் உபகாரச் செய்கை தோன்றாது. 
  • அது தோன்றாதபோது சீவகாருணியம் விளங்காது; 
  • அது விளங்காதபோது கடவுளருள் கிடைக்க மாட்டாது. 
  • ஆகலால், பசியும் கடவுளாற் கொடுக்கப்பட்ட ஓர் உபகாரக் கருவியென்றே அறியவேண்டும்.


No comments:

Post a Comment